Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, August 06, 2011

பட்ஜெட் 2011


ஒருவழியா புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டது. இனி இதன் மீது பேரவை விவாதம் நடக்கவிருக்கிறது. இம்முறையும் பட்ஜெட்டில் அதிமுக  அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த இலவசங்களுக்கே முன்னுரிமை அளித்துள்ளது. இலவச கிரைண்டர், பேன், போன்றவற்றுக்கே 1000 கோடி ருபாய்க்கு மேல் ஒதுக்கிவிட்டனர்.
புதிய அரசு பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் தாக்கல் செய்யும் பட்ஜெட் சற்று விவாதத்துக்குள்ளாகும். காரணம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே அவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள். அதையே தான் இந்த அரசும் செய்துள்ளது.
சரி இப்படி இவர்கள் விருப்பத்திற்கு இலவசத்தை வழங்குகிறார்கள். இதெற்கெல்லாம் பணம்? வேறு என்ன! கடன் தான். தற்போது தமிழ்நாட்டின் மொத்த கடன் 1,18,610 கோடி ரூபாய். அடேங்கப்பா, இவ்வளவா(ஸ்பெக்ட்ரம் முறையாக நடந்திருந்தால் அந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபத்தில் ஒரு மாநிலத்துக்கே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கமுடியும்).இதற்கு வட்டி தொகை மட்டும் ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தவேண்டும்.இந்த நிலையில் தமிழகம் தான் குறைவாக கடன் வைத்திருக்கும் மாநிலத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது என்று பெருமை வேறு. இன்னும் இரண்டு ஆண்டுக்குள் கடனை திருப்பி செலுத்த வழிவகை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தற்போது இருக்கின்ற பழைய பேருந்துகள்  மிக அவல நிலையில் உள்ளன.அரசின் சொகுசு பேருந்தில் மூட்டைபூச்சிகள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. சேலம், விழுப்புரம் கோட்டங்களை பார்கையில் கோவை கோட்டத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் சற்று பரவாயில்லை.
மூன்று மணி நேரம் நிதியமைச்சர் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை முன்னால் முதல்வர் அவர்கள் “இது ஒரு பட்ஜெட்டா?” என்று கேட்டு அறிக்கை விடுத்துள்ளார். அய்யா அவர்கள் 2006 தேர்தலில் வெற்றி பெற்று தாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை ஒரு நிமிடம் நினைவுகூர்ந்து  பாருங்கள் தங்களுக்கே அது வேடிக்கையாக தெரியும்.
இந்த பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு கோடிகளை ஒதுக்காமல் இலவசத்துக்கே ஒதுக்கிவிட்டார்கள். இருந்தும் ஒரு சில நல்ல திட்டத்திற்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வேலையில்லா பட்டதாரிகளை இந்த பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.. போலீசாருக்கும் 40 மற்றும் 100 கோடி என தனியாக ஒதுக்கிவிட்டார்கள். இலவச வீட்டு திட்டத்தில் இரண்டு வகைகளை வகுத்துள்ளனர். அது சற்று வருத்தத்துக்குரியது. தாலிக்கு தங்கம் வாங்குவது, இலவச லேப்டாப், 106 கோயில்களில் அன்னதானம், அணைகளை பராமரித்தல், காவிரியில் புதிய தடுப்பணை கட்டுவது என அட்டவணை நீண்டுகொண்டே செல்கிறது.
மற்றொரு பாராட்ட வேண்டிய திட்டம் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிவாரண நிதி 1.75 கோடியிலிருந்து   2 கோடியாக உயர்த்தியது. ஆனால், எத்தனை நபர்கள் இதை சரியாக பயன்படுத்துவார்கள்  என்றுதான் தெரியவில்லை. புதிய மின் நிலையம் அமைதல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.  

0 comments:

Post a Comment

 

வந்து போனவுங்க